இப்போதெல்லாம் பெண் விடுதலை ஆணாதிக்க எதிர்ப்பு இவைகளைப் பற்றிப் பேசினால்தான் fashion. ஆகையால் நாமும்தான் கொஞ்சம் மாடர்னாக சிந்திப்போமே!!! பெண் புத்தி பின் புத்தி என்று கூறி பெண்களை இழிவு செய்கிறார்கள்.
உண்மையில் ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்களா? இதை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
வேதகாலத்தில் விஸ்வாமித்ரர் வசிஷ்ட்டர் யாக்ஞவல்க்யர் போன்ற தவ ஸ்ரேஷ்ட்டர்கள் இருந்தார்கள். அதைப்போலவே கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண்களும் மிகச்சிறந்த தவ ஸ்ரேஷ்ட்டர்களாக விளங்கினார்கள். அவர்களும் ஆண்களுக்கு நிகராக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள். கார்க்ய சம்ஹிதை என்றே ஒரு உப வேதம் உள்ளது. எனவே வேத காலத்தில் எல்லாம் ஆண்களைவிட பெண்கள் குறைவாக மதிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.
சரி, சங்க காலத்தில் இப்பழக்கம் தோன்றியதா என்று பார்ப்போம்.
சங்க காலத்தில் ஔவையார், காக்கைப் பாடினியார், நச்சினார்க்கினியார் போன்ற பெண் பாற் புலவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகுனினும் கற்கை நன்றே" என்று பாடிய ஔவையார் காலத்தில் பெண் கல்வி மறுக்கப் பட்டிருக்க சிறிதும் வாய்ப்பில்லை.
வரலாற்றுக் காலத்தில் இந்த மாதிரி ஏதாவது உள்ளதா என்று பார்த்தல் அதுவும் இல்லை. இப்போது கொருக்குப்பேட்டையிலிருந்து பாரிஸ் கார்னருக்குப் போய் வந்தால் கூட பயணக் கட்டுரை எழுதுகிறார்கள். ஆனால் முதன் முதலில் பயணக் கட்டுரை எழுதியவர் ஒரு பெண் என்பது பலருக்குத் தெரியாது.
. அது மாலிக்காபூர் தென்னிந்திய படையெடுப்பை ஒட்டிய காலம். அப்படி அவன் படை எடுத்து வந்த போது பல பிரசித்தி பெற்ற கோவில்களும் இடிக்கப் பட்டன. அப்போது வித்யாரண்யரால் ஹரிஹரர் புக்கரைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட விஜய நகர ஸாம்ராஜ்யத்துக்கு கம்பன்ன உடையார் என்பவர் படைத்தளபதியாக இருந்தார். அவரை வித்யாரண்யர் தென் திசைக்கு அனுப்பி மாலிக்காபூர் படைகளை வெற்றி கொள்ளச் செய்தார். கம்பன்ன உடையாரும் அப்படியே செய்து, சிதறுண்டு போன அனைத்துப் பிரதேசங்களையும் ஒன்று சேர்த்தார்.
அந்தக் கம்பன்ன உடையார் போருக்குச் செல்லும் போது அவருடைய மனைவி கங்கா தேவியும் உடன் சென்று ஆங்காங்கே நடந்தவைகளை எல்லாம் ஒரு பெரிய காவியமாகத் தீட்டி இருக்கிறாள்.. சமஸ்க்ருதத்தில் உள்ள அந்தக் காவியத்தின் பெயர் கங்கா தேவி மதுரா விஜயம் என்பது. epigraphical department இல் இப்போதும் அதைக் காணலாம்.காளிதாஸரையே விஞ்சும் அளவுக்கு மிக அற்புதமான காவிய சுவையுடன், 600 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணால் எழுதப்பட்டதுதான். இந்த கங்கா தேவி மதுரா விஜயம்.
அதற்குப் பிறகு வந்த மொகலாயர் ஆட்சி காலத்தில் சில கொடுங்கோல் மன்னர்களின் செயலால் பெண்களின் நிலை மிகவும் பாதிப்படைந்தது. அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப் பட்டார்கள். இதனால் அவர்களுக்கு கல்வி உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப் பட்டன.
சுமார் 400 வருடங்களுக்கு இதே நிலை நீடித்தது. பிறகு ராஜா ராம் மோகன் ராய், போன்ர்றவர்களின் பெரு முயற்சியால் சிறிது சிறிதாக பெண்களின் நிலை முன்னேற்றம் அடைந்தது.
இப்போது பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பெண்கள் திறம்பட செய்கிறார்கள்.
ஆண்களுக்கு நிகராகப் பல துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமையை .நிரூபித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் பெண்புத்தி பின் புத்தி என்று கூறி பெண்களை இழிவு செய்கிறார்கள்.
இந்தப் பழமொழியைக் கேட்டால் எல்லாப் பெண்களுக்குமே கோபம்தான் வரும். சரி, இது எந்த நோக்கத்தில் சொல்லப் படுகிறது? பெண்கள் எந்த விஷயத்தையுமே முன் யோசனை இன்றி செய்துவிட்டு, தவறு நடந்த பிறகு வேதனை படுவார்கள்" என்ற அர்த்தத்தில் தான் கூறப்படுகிறது.
இதுதான் இப்பழமொழியின் உண்மையான அர்த்தமா? அப்படியானால் "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்" என்று இன்னொரு பழமொழி உள்ளதே...... இவ்விரு பழமொழிகளையும் இணைத்துப் பார்த்தால் எளிதில் அர்த்தம் புரிந்துவிடும்.
என்ன? யூகித்துவிட்டீர்களா?
பெரும்பாலும் எந்த ஒரு ஆணின் செயலுக்குப் பின்னாலும் மூளையாக இருந்து செயல் படுபவள் ஒரு பெண்ணே. பின்னால் இருந்து செயல் படும் remote என்பதைத்தான் பின்புத்தி என்றார்களே தவிர பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல. எனவே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதும் பெண் புத்தி பின் புத்தி என்பதும் ஒரே அர்த்தத்தைக் கொண்டதுதான். இனி யாராவது பெண் புத்தி பின் புத்தி என்று கூறினால் அதற்காக பெண்கள் வருத்தப் படவோ கோபப் படவோ தேவையில்லை. மாறாக (T) shirt ன் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
Monday, June 9, 2008
Subscribe to:
Posts (Atom)